கனடியக் கவிஞர் ஆன் கார்சனுக்கு (Anne Carson) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், செவ்வியல் பேராசிரியர் என்று பல்வேறு அடையாளங்களைக் கொண்டு ஆன் கார்சனை நாம் அறிமுகப்படுத்தலாம்.
‘செவ்வியல் மரபுடன் விளையாட்டுத்தனமாக உரையாடியபடி, சமகால இலக்கியத்துக்குப் புதிய வடிவங்களை அளித்த துணிச்சலும் புத்தாக்கமும் மிக்க படைப்புகளுக்காக இந்த விருது’ என்று ஸ்வீடிஷ் அகாடமியின் அறிவிப்பு தெரிவிக்கிறது.
விருதுச் செய்தியைத் தெரிவிப்பதற்காக அகாடமியின் நிரந்தரச் செயலர் அழைத்தபோது, ஆன் கார்சன் பெரிதும் ஆச்சரியப்பட்டாராம். தான் இப்போது ஐஸ்லாந்தில் இருப்பதாகவும், காற்றைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் சொல்ல மட்டுமே அவருக்கு நேரம் இருந்ததாம். அவரது எழுத்துகளைப் படித்தவர்களுக்கு, இதுவும் அவரது இயல்புடன் பொருந்தியதாகவே இருக்கும்.
தத்துவ விசாரணையும் கவித்துவமும்
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கய் டாவன்போர்டின் (Guy Davenport) உந்துதலால் ஆன் கார்சனை மீண்டும் படிக்க நேர்ந்தது. அதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆன்டிகோனிக் (Antigonick) என்கிற புத்தகம் வழியே அவர் எனக்கு அறிமுகமாகி இருந்தார். அந்தப் புத்தகம் எனக்குப் பிடித்தமானதுதான். ஏனோ, அதன் பிறகு அவரைத் தொடர்ந்து படிக்காமல் விட்டுவிட்டேன். அதைப் பேரிழப்பாக உணர்ந்த அந்த ஆண்டில் அவரது கண்ணாடி, நகைமுரண், கடவுள் (Glass, Irony and God) என்கிற கவிதைத் தொகுப்பையும், யூரிபிடீஸின் நான்கு நாடகங்களின் மொழிபெயர்ப்பான துயரத்தின் பாடங்கள் (Grief Lessons) தொகுதியையும் படித்தேன்.
தத்துவ விசாரணை சார்ந்த அவரது கட்டுரைகள் கவித்துவமானவை. அவரது கவிதைகளோ தத்துவ விசாரணையின் சாயல் கொண்டவை. அவரது பண்டைய கிரேக்க நாடக மொழிபெயர்ப்புகள் நவீனக் கவிதையின் சாயல் கொண்டவை. அவற்றின் முன்னுரைகள் இலக்கிய விமர்சனம் உள்ளிட்ட பல துறைகளை ஒருங்கிணைக்கும் ருசிகரமானவை.
யூரிபிடீஸைப் பற்றி எழுத முயன்றபோது, அந்த முன்னுரைகளைக் கடந்து என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. அதனால், அந்த நான்கு முன்னுரைகளையுமே நான் மொழிபெயர்த்தேன். அவற்றின் கூட்டுத்தொகையே யூரிபிடீஸின் உலகுக்கான கச்சிதமான அறிமுகம் என்று நம்புகிறேன்.
இடைவெளியில் நிகழும் எழுத்து
ஆன் கார்சனின் முதல் நூல் கசந்தினிக்கும் ஈராஸ் (Eros the Bittersweet, 1986). அதன் முன்னுரையிலேயே அவர் காஃப்காவின் ‘பம்பரம்’ என்கிற சிறுகதையை எடுத்துக்கொள்கிறார். ஒரு தத்துவவாதி குழந்தைகள் பம்பரம் விளையாடும் இடங்களிலேயே சுற்றித் திரிகிறான். ஒரு சிறு விவரத்தை — எடுத்துக்காட்டாக, சுழலும் ஒரு பம்பரத்தை — முழுமையாகப் புரிந்துகொண்டால் எல்லாவற்றையும் புரிந்துகொண்டுவிடலாம் என்பது அவன் நம்பிக்கை. பம்பரம் சுழலத் தொடங்கியதும் அதன் பின்னால் ஓடிப் பிடிக்கிறான். அதைக் கைப்பற்றிய கணத்தில் மகிழ்ச்சி அடைகிறான். மறுகணம், கையில் இருப்பது ஒரு அசட்டு மரத்துண்டு மட்டுமே என்பதை உணர்கிறான். குழந்தைகளின் கூச்சலுக்கு இடையே, சாட்டையடி பட்ட பம்பரம் போலத் தள்ளாடியபடி அவன் வெளியேறுகிறான்.
நம்மை ஈர்ப்பது கையில் அடங்கிய பொருள் அல்ல; சுழற்சிதான், இன்னும் எட்டாத அந்த இடைவெளிதான். அவரது எல்லா எழுத்துகளும் அந்த இடைவெளியில்தான் நிகழ்கின்றன என்று இப்போது தோன்றுகிறது.
யூரிபிடீஸின் ‘ஆல்கெஸ்டிஸ்’ (Alkestis) அத்தொகுப்பில் நான்காவது நாடகமாக இடம்பெறுகிறது. மரணத்துடன் அட்மெடோஸ் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பேரில், அவனுக்குப் பதிலாக அவன் மனைவி ஆல்கெஸ்டிஸ் பாதாள உலகுக்குப் புறப்படுகிறாள். ஒப்பாரிகளும் ஈமச் சடங்குகளுமாக அவன் வீடு துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது. அந்த வேளை பார்த்து ஹெரக்ளீஸ் விருந்தாளியாக வருகிறான். அட்மெடோஸ் மனைவி இறந்ததை மறைக்கிறான். வீட்டை இரு பகுதிகளாகப் பிரித்து, ஹெரக்ளீஸை ஒரு பகுதியில் அமர்த்தி, அவனை நன்றாகக் கவனித்துக்கொள்ளும்படி வேலையாள்களுக்கு ஆணையிடுகிறான். ஒரே வீட்டில் இழவு ஒப்பாரிகளும் களியாட்டங்களும் ஒருங்கே ஒலிக்கின்றன. கடவுள்களையே நம்பக் கூடாது என்று ஹெரக்ளீஸ் முடிவெடுக்கிறான்.
இனிய ஞானம்
உலகத்தைப் படைத்தவனையே விமர்சனம் செய்வதாக நான் இதை அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். ‘ஹெரக்ளீஸ்’ (Herakles) நாடகம், “எங்கள் மாபெரும் நண்பனை இழந்துவிட்டதால் / கருணையுடனும் கண்ணீருடனும் நாங்கள் செல்கிறோம்” என்று சோகமாக முடிகிறது.
‘ஹெகாபே’ (Hekabe) நாடகம் “நிர்ப்பந்தம் கொடியது!” என்று ரத்தினச் சுருக்கமாக முடிகிறது. ‘ஹிப்போலிடோஸ்’ (Hippolytos) நாடகத்தை “மாபெரும் மனிதர்களின் / வாழ்க்கைகளில் / மாபெரும் துயரம் வாழ்கிறது” என்கிற வரிகள் [தொடர்ச்சி தெளிவாகப் படிக்க முடியவில்லை].
‘ஆல்கெஸ்டிஸ்’ நாடகம் கடவுள்களின் விளையாட்டைப் போற்றிவிட்டு, “நடந்தது இதுதான் / நம்மை ஆச்சரியப்படுத்த / கடவுள் ஒரு வழி கண்டுபிடித்துவிட்டார்” என்று இயல்புணர்ந்தோரின் இனிய ஞானத்தில் முடிகிறது.
ஆன் கார்சனுக்கும் சொந்த ஒப்பாரி ஒன்று இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்க்காமல் பிரிந்திருந்த அவரது சகோதரன் மைக்கேல், 2000இல் கோபன்ஹேகனில் இறந்துபோனான். அந்த இழப்பை அவர் நாக்ஸ் (Nox, 2010) என்கிற நூலின் வழியே ஈடுகட்ட முயன்றார்.
அதை நூல் என்று சொல்வதற்கே தயக்கமாக இருக்கிறது. ஏனெனில், அது ஒரு (சவப்) பெட்டி. அதற்குள் விசிறி மடிப்பாக மடிக்கப்பட்ட ஒரே நீண்ட தாள் இருக்கிறது. இழுத்து விரித்தால் அறை முழுவதும் நீளும் அக்கார்டியன் போல அது விரிகிறது.
சகோதரனின் சமாதிக்கு வந்து நிற்கும் கேட்டுல்லஸின் (Catullus) புகழ்பெற்ற இரங்கற்பாவின் ஒவ்வொரு லத்தீன் சொல்லுக்கும் அகராதிப் பதிவுகள் ஒரு பக்கம் இருக்கின்றன. மறுபக்கம் சகோதரனின் ஒளிப்படங்கள், கடிதத் துண்டுகள், கிழிந்த குறிப்புகள், வண்ணத் தீற்றல்கள். அந்தப் பாடல் ‘Ave atque vale’ (வாழ்க, போய் வா) என்று முடிகிறது.
ஆன் கார்சன் அதை மொழிபெயர்த்து முடிப்பது [இந்தப் பகுதியில் சில சொற்கள் தெளிவாகப் படிக்க முடியவில்லை]. ஏந்தக்கூடிய ஒரு பொருளாக அது மாறுகிறது. அதைத் தொடுவதில், விரிப்பதில், மீண்டும் பெட்டிக்குள் மடித்து வைப்பதில் ஒரு விசித்திரமான உடல்சார் இன்பம் இருக்கிறது. சாவு மேளமும் முழவோசையும் ஒரே வீட்டில் ஒலிப்பதுபோல, துயரமும் இன்பமும் ஒரே பொருளில் வசிக்கின்றன.
காஃப்காவின் தத்துவவாதியும் ஒருவகையில் இயல்புணர விழைந்தவன்தான். ஒரு பம்பரத்தின் வழியே உலகம் முழுவதன் இயல்பையும் கைப்பற்ற முயன்றவன். ஆனால், கைப்பற்றிய இயல்பு கையில் செத்த மரமா?
ஆன் கார்சன் பம்பரத்தைப் பிடிக்க முயல்வதில்லை. அதைச் சுழல விடுகிறார். சகோதரனின் மரணத்தைக்கூட அவர் கையில் இறுகப் பற்றவில்லை. விரிந்து மடியும் ஒரு பொருளாக அதை நம் கையில் வைக்கிறார்.
அவர் கையில் யூரிபிடீஸின் நாடகங்களும் சாஃபோவின் சிதறல்களும் 2500 ஆண்டுகளுக்குப் பிறகும் மீண்டும் சுழல்கின்றன. நோபல் பரிசை ஒரு சென்றடைதலாகப் பார்க்கத் தோன்றலாம்.
நம்முடைய சங்க இலக்கியத்தையும் கிரேக்க நாடகங்களையும் ஒரு சில நூற்றாண்டுகளே பிரித்து வைக்கின்றன. நமக்கும் சங்கத்துக்கும் இடையே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் இருக்கின்றன. காலங்காலமாக உலகின் இன்பத்தை விழைந்து, அதன் இயல்பை மீண்டும் மீண்டும் துன்பத்தில் உணர முயன்றுகொண்டிருக்கிறோம்.
பம்பரம் இன்னும் சுழன்றுகொண்டிருக்கிறது.
ஆன் கார்சனுக்கு வாழ்த்துகள்.

